கடல்நீர் உப்புக்கரிப்பது ஏன் ?



கடல்நீர் உப்புக்கரிப்பதின் காரணம் என்ன?


ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.

பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் கடல் நீரை ஒரு கை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டால் வயிற்றைக் குமட்டுகிற அளவுக்கு உப்புக் கரிக்கும். ஆனால் உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் உப்புத்தன்மை ஒரே அளவில் உள்ளதாகச் சொல்ல முடியாது.

ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம். மழை பெய்து
குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.
கடல்வாழ் ஜீவராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.
சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.
இதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது. கடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.
வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது. அதிலும் நம் உடலில் உள்ள உப்பு இருக்கும். உடல் செயல்படுவதால் ஏற்படும் வளர் சிதை மாற்றத்தால்  உருவாகும் யூரியாவும் கலந்து வரும். அதனால் வியர்வையும் உப்புக் கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி, தசை பிடிப்பு ஏற்படும். அதனைஈடு செய்ய அப்போது உப்பு சத்துள்ள திரவங்களை  உட்கொள்ள வேண்டும்.


சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர் ஒருவர் உலகின் கடல்களில் 77 இடங்களிலிருந்து கடல் நீர் சாம்பிள்களை சேகரித்து ஆராய்ந்தார். கடல் நீரில் எடை அளவில் சராசரியாக 3.5 சதவிகித அளவுக்கு பல்வேறு உப்புகள் கலந்துள்ளதாக அவர் கண்டறிந்தார். அதாவது ஒரு லிட்டர் கடல் நீரில் 3.5 கிராம் அளவுக்கு உப்பு உள்ளது.
எனினும் ஐரோப்பாவையொட்டிய பால்டிக் கடலில் உப்புத் தன்மை சற்றே குறைவு. இதற்கு நேர்மாறாக செங்கடலில் உப்புத் தன்மை அதிகம். அக்கடல் குறுகியதாக உள்ளது என்பதும் அதில் வந்து கலக்கும் நதிகள் குறைவு என்பதும் இதற்குக் காரணம்.

ஆனால் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் ஒப்பு நோக்குகையில் உப்புத்தன்மை சற்று குறைவு. கங்கை, பிரும்மபுத்திரா, மகாநதி போன்ற பல நதிகள் இக் கடலில் வந்து கலப்பதே இதற்குக் காரணம். இந்துமாக்கடலை விடவும், பசிபிக் கடலை விடவும் அட்லாண்டிக் கடலில் உப்புத் தன்மை அதிகம்.
கடல் நீருடன் ஒப்பிட்டால் நதி நீர் உப்புக் கரிப்பது இல்லை. நதி நீர் ருசியாகவே உள்ளது. ஆனால் கடல் நீரில் கலந்துள்ள உப்புகள் அனைத்தும் நதிகள் மூலம் வந்து சேர்ந்தவையே.
நதிகள் நிலப்பரப்பின் வழியே ஓடி வரும்போது பாறைகளை அரிக்கின்றன. நிலத்தை அரிக்கின்றன. அப்போது நதி நீருடன் பாறைகள், நிலம் ஆகியவற்றிலிருந்து சிறிதளவு உப்பு கலக்கிறது. பல கோடி ஆண்டுகளில் இவ்விதமாக நதிகளால் அடித்துச் செல்லப்பட்ட உப்பு கடல்களில் போய்ச் சேர்ந்துள்ளது.
சூரிய வெப்பம் காரணமாக கடல்களில் உள்ள நீர் ஆவியாக மேகங்களாக உருவெடுக்கின்றன. கடல் நீர் ஆவியாகும் போது உப்பு பின் தங்கிவிடுகிறது. உப்பு இவ்விதம் பின் தங்கிவிடுவதால் தான் மழை நீர் உப்பு கரிப்பது இல்லை. தவிர, உப்பு பின் தங்குகிற அதே நேரத்தில் நதிகள் மூலம் பல கோடி ஆண்டுகளில் மேலும் மேலும் உப்பு கடலில் வந்து சேர, கடல் நீர் உப்பு கரிக்க ஆரம்பித்தது.
ஆனாலும் சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு கடல் நீரானது இப்போது உள்ளதை விட மேலும் அதிக அளவில் உப்புக் கரிக்கும் என்று சொல்ல முடியாது. ஆண்டுதோறும் நதிகள் மூலம் சுமார் 400 கோடி டன் உப்பு கடலில் வந்து சேருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் நீரிலிருந்து சுமார் 400 கோடி டன் உப்பு தனியே பிரிந்து கடலுக்கு அடியில் போய் வண்டல் போலத் தங்கிவிடுவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். சூடான காப்பியில் நீங்கள் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டால் கரைந்து விடும். ஆனால் 6 ஸ்பூன் சர்க்கரை போட்டால் காப்பி சற்று ஆறியவுடன் கூடுதல் சர்க்கரை கரையாமல் அடியில் தங்கும். அது போலத்தான் கடல்களின் அடியில் உப்பு படிகிறது.
இக் காரணத்தால் தான் கடல்களின் உப்புத் தன்மை அதிகரிக்காமல் சிராக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்விதம் கடலடித் தரையில் படியும் உப்பானது கனத்த அடுக்காகப் படிந்து நிற்கிறது.
பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட காலம் கடல் நீரால் மூழ்கப்பட்டிருந்து பின்னர் கடல் நீர் அகன்ற இடங்கள் பலவற்றில் நிலத்துக்கு அடியில் கெட்டிப்பட்ட பாறை வடிவில் உப்பு கிடைக்கிறது. உதாரணமாக இமயமலைப் பகுதியில் இவ்வித உப்பு கிடைக்கிறது. அமெரிக்காவில் மிட்சிகன் மாகாணத்திலும் இவ்விதம் பாறை உப்பு கிடைக்கிறது.









Comments

Popular posts from this blog

சாளுக்கியர்களின் பேரரசு

பாண்டியன் நெடுஞ்செழியன்

உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்