பணம் குவியும் கேம் & ரியாலிட்டி ஷோக்கள்
பணம் குவியும் கேம் & ரியாலிட்டி ஷோக்கள்
தற்போது தொலைக்காட்சிகளிடையே “கேம் ஷோ” மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இவை மேற்கத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நகல்கள். இவை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநிலத்திற்கேற்ற மொழியில் வடிவமைக்கப்பட்டு ஒளிபரப்படுகின்றன. அதற்கு மக்கள் வரவேற்பும் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி போகிற போக்கைப்பார்த்தால் என்னங்க நீங்க! இது வரை ஒரு “கேம் ஷோ”, “ரியாலிட்டி ஷோ” ல கூட கலந்து கொண்டதில்லையா? என்று துக்கம் விசாரிக்க வந்து விடுவார்கள் போல இருக்கிறது. அந்த அளவிற்கு இவை மக்களைப் பிடித்து ஆட்டுகிறது. தொலைக்காட்சிகள் தான் அளவுக்கு மீறிய விளம்பரங்கள் மூலம் நம்மை பாடாய் படுத்துகிறார்கள் என்றால், அதில் கலந்து கொள்பவர்கள் நடிகர் திலகத்தையே மிஞ்சிவிடும் நடிப்பில் பல்வேறு முகபாவனைகளைக் காட்டி தொலைக்காட்சி பார்ப்பவர்களை கண்ணீர்விட வைத்துவிடுகிறார்கள்.
கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளில் தாங்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பதை அறியாமலே தங்கள் பணத்தை செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஓரளவு விஷயம் தெரிந்தவர்களுக்கு, தாங்கள் அனுப்பும் குறுந்தகவல் (SMS) கட்டணம் எவ்வளவு என்று தெரியும். ஆனால், இன்னும் பலருக்கு தாங்கள் எவ்வளவு பணம் இதற்காக கொடுக்கிறோம் என்று தெரியாமலே அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வருகிறார்கள். மிக மிக எளிமையான கேள்வியைக் கேட்டு குறுந்தகவல் அனுப்ப தூண்டுகிறார்கள். நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகள் கட்டணம் குறித்து ஒரு ஓரமாக போட்டுவிடுகிறார்கள்.
இதில் மக்களின் பேராசையையும் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், நாம் அனுப்பும் குறுந்தகவலுக்கு ஒருமுறையாவது பரிசு கிடைத்துவிடாதா?!? என்ற நப்பாசை தான் இதை தொடர்ந்து செய்யத் தூண்டுகிறது. லாட்டரி மோகத்தையே இன்னும் கொஞ்சம் பெரியளவில் செய்கிறார்கள். இவர்கள் செய்வதைப் பார்த்தால் அந்நியன் பட “ஐந்து பைசா” வசனம் தான் நினைவிற்கு வருகிறது. இதுபோல், கோடிக்கணக்கில் அனுப்புகிறார்கள். சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் மயக்க மருந்து கொடுக்காமலே நமக்கு மயக்கம் வரும்.
இந்தப் போட்டிகளின் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பது தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தான். காரணம், இவர்கள் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனங்களால் எதுவுமே செய்ய முடியாது. குறுந்தகவலுக்கு எப்படி இருந்தாலும் இவர்களிடமே சென்றாக வேண்டும். எனவே, இவர்கள் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு சரியாக வரும் நிறுவனத்தோடு கூட்டு வைத்துக்கொண்டு இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.
இதைப்போல மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களையே மிஞ்சிவிடுவார்கள் என்பதை நீங்களும் உங்கள் தினசரி வாழ்க்கையில் அனுபவித்து இருப்பீர்கள். ஏதாவது குறுந்தகவலை உங்களுக்கு அனுப்பி எண்ணை தொடர்பு கொள்ளக்கூறி 1 அழுத்து 3 அழுத்து என்று கூறி அதற்கும் பணத்தை வசூலித்துவிடுவார்கள். இதே கொடுமை என்றால் இதைவிடக் கொடுமையாக முக்கால் வாசி செய்து முடித்த பிறகு நமது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு, திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒரு உதாரணமே போதும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கூற.
இப்படிப்பட்டவர்கள் வலை விரிக்காமலே தானாக வலையில் வந்து மாட்டுபவர்களை விடுவார்களா? நாம என்ன ஒரு குறுந்தகவல் தானே அனுப்புகிறோம்..! என்று நினைக்கும் மக்களின் எண்ணமே இவர்களின் மூலதனம். நம்மைப் போல கோடிக்கணக்கானோர் அனுப்புகிறார்கள். அதுவும் என்ன? 1 ரூபாய்க்கா அனுப்புகிறார்கள்?? ஐந்து லகரம் கொண்ட இந்த எண்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களுக்கு சிறப்புக் கட்டணம்! 3 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை நிர்ணயிக்கிறார்கள். இந்தக் கட்டணங்கள், நிகழ்ச்சியின் தன்மையையும், எதிர்பார்க்கப்படும் குறுந்தகவல்களின் எண்ணிக்கையும் அதில் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்கு சதவீதத்தையும் வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன. இன்னும் இதன் உள் விவரங்களுக்குப் போனால், இது பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
தற்போதைய தொலைக்காட்சிகளின் நிறுவனத்தினர், நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் பணமாக மாற்றி சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய பணத்தை இழந்து இவர்கள் சம்பாதிக்க நாம் மறைமுகமாக துணை போய்க்கொண்டு இருக்கிறோம். சுருக்கமாகக் கூறுவது என்றால் அவர்கள் சம்பாதிக்க மக்கள் செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் நடைமுறை உண்மை.
இவர்களுக்கு எதைக்கூறினால் எதைக் காண்பித்தால் மக்கள் பார்ப்பார்கள் என்பதை சரியாக அறிந்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் அதிகம் பார்த்தால் தான், TRP (Television Rating Point) அதிகரிக்கும். TRP அதிகரித்தால் தான், விளம்பர வருவாய் அதிகரிக்கும். TRP குறையைக் குறைய விளம்பர வருவாயும் குறைந்து விடும். எனவே இதைத் தக்கவைத்துக் கொள்ளத்தான், அனைத்து தொலைக்காட்சிகளும் படாதபாடு படுகின்றன. சமீபமாக TRP பல தொலைக்காட்சிகளுக்கு அடிவாங்க ஆரம்பித்து இருக்கிறது. காரணம், நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமான திருவாளர் “மின்சாரம்” தான். சென்னை தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மின்சாரம் மிகப்பெரிய வில்லனாக மக்களுக்கு மாறி இருக்கிறதோ இல்லையோ, இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மாறி இருக்கிறது..!
தற்போது அதிகபட்ச மின்வெட்டால், தொலைக்காட்சி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. எனவே தொலைக்காட்சிகள் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி TRPயைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மின்சாரம் இருக்கின்ற கொஞ்ச நேரத்தில் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை, மக்களை பார்க்க வைப்பதே இவர்கள் எண்ணம்.
மக்கள் வரவேற்பு உள்ளது என்பதற்காக முடிக்க வேண்டிய சீரியலில் எல்லோரையும் வில்லன் வில்லியாக்கி எப்படி தொடரைக் கொண்டு போவது என்று தெரியாமலே தொடரை நீட்டித்து மக்களை இம்சிக்கிறார்களோ, அதே போல இந்த “ரியாலிட்டி ஷோ” நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சிக்குச் சம்பந்தமேயில்லாத இடைச் செருகல்களும், வெளியேறிய நபர்களைப் பிடித்து மறுபடியும் “நடிக்க” வைத்து விளம்பரத்திற்க்காக அவர்கள் குடும்பமே ஆனந்தக் கண்ணீர் விடுவதைக் காட்டி, பார்ப்பவர்களையும் கண்ணீர் குளத்தில் மூழ்கடித்து, மேலும் மேலும் நீட்டித்து விளம்பர வருவாய் பெறுகிறார்கள்.
நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மக்களுக்கு காண்பிக்கிறோம் என்று பேய், பிசாசு, வன்முறை, பாலியல் என்று எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் அனைத்தையும் நமது வீட்டினுள் கொண்டு வந்து விடுகிறார்கள். மக்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், எச்சரிப்பதும் சரியான ஒன்றே! அதில் யாரும் குறை காணப்போவதில்லை. அதற்காக உண்மையைக் கூறுகிறோம், நடந்ததை காட்டுகிறோம் என்று கட்டுப்பாடில்லாமல் TRP க்காக பரபரப்பு என்கிற பெயரில் வன்முறைகளைக் காண்பித்தும், மதச்சார்புள்ளவற்றைக் கிண்டல் செய்தும், பணம் சம்பாதிப்பது மட்டுமே எண்ணமும் செயலுமாகவும், நினைத்ததையெல்லாம் பிரச்சாரம் செய்வதை (அதுவும் மக்கள் பணத்திலேயே) வாடிக்கையாகவும் கொள்வது நிறுத்தப்படவேண்டும்.
Comments