சாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்!
சத்திரபதி சிவாஜியை பார்ப்பனர்கள் அரசாளக் கூடாது என்று தடுத்ததையும் பிறகு அவரது சாதியை மாற்றி பார்ப்பனர்கள் அரசாளச் செய்ததையும் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள்.!{ படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்} பார்ப்பனர்கள் இப்படி பிறந்த சாதியை மாற்றும் செயலுக்கு, நடத்தும் யாகத்துக்கு, "ஹிரணிய கர்ப்பம்" என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த சாதி மாற்றும் சடங்கு, யாகத்தை எல்லோராலும் செய்துவிட முடியாது! பார்ப்பனர்கள் அனுமதித்தால் மட்டும் செய்துவிட முடியாது! இந்த சாதிமாற்றதை செய்வதற்கு, ஏராளமான பொன்னும், பசுக்கள், அதிக வசதி ஆகியவைகள் இருந்தால்தான் செய்ய முடியும்! அதிக வசதியுள்ள சமஸ்தானாதிபதிகள்,ராஜாக்கள் போன்றவர்களால் மட்டுமே செய்துகொள்ள முடியும்!
ஏனெனில், அவர்களுக்குதான் மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என்ற பெருமிதமும்,ஆணவ செருக்கும், தேவைப்படுகிறது. தவிர எல்லோரையும் விட உயர்ந்தவர்களாக இந்து மதத்தில் காட்டப்படுகிற, நிலைநிறுத்தப் பட்டு உள்ள பிராமணர்களின் ஆதரவும், ஆசியும், துணையும் தேவைப்படுகிறது என்பதால், சாதி மாற்றத்தை செய்யும் சடங்கு, வேள்வியைச் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
தவிர அரசனோ, அரசனைப் போல செல்வமும் அந்தஸ்தும் உள்ளவர்களால் மட்டுமே, மிகுந்த பொன்னையும் பொருளையும் பிராமணர்களுக்கு கொடுக்க முடியும் என்ற உண்மையும் ஒரு காரணமாகும்.!
இந்த காலத்திலே அரசியல் கட்சிகள் மாநாடு என்று நடத்துவார்களே, கோடிகணக்கில் செலவு செய்து, ஏக்கராக் கணக்கில் பிரமாண்டமான பந்தல் போட்டு, வாயில்கள், தோரணங்கள் கட்டி, பக்கம் பக்கமாக பத்திரிகைகள், தொலைகாட்சிகளில் விளம்பரப் படுத்தி நடத்தப் படும் மாநாடுகளுக்கு ஆகும் செலவை தனது சாதியை மாற்றிக் கொள்ள விரும்பும், சாதியை மாற்றிக் கொள்ள அனுமதித்து, சாதி மாற்றத்தைச் செய்யும் பிராமணர்களுக்கு தரவேண்டியிருக்கும்!
சாதி மாற்றம் என்ற ஹிரணிய கர்ப்பம் என்கிற யாகத்தை, சடங்கை செய்வதற்கு முதல் தேவை என்ன தெரியுமா?
முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பசுவின் உருவம் ஒன்று தேவைப்படுகிறது!
தங்கத்தால் செய்யப்படும் இந்தபசுவின் உருவத்தை நமது எண்ணப்படி சிறிதாக செய்துவிட முடியாது. 'காரை பார்த்துவிட்டு,அது வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப் படுத்த,பெற்றோர்கள் பொம்மைக் காரை வாங்கி கொடுத்து சமாளிப்பதைப் போல', 'பொன்னை வைக்கும் இடத்தில பூவை வைப்பதைப் போல' சமாளிக்கும் விதமாக,சாதியை மாற்றிக்கொள்ளும் ஒருவர், பேருக்கு பசுவின் உருவத்தில் சிறிதாக ,தங்கத்தால் செய்து பூஜையில் வைத்து, சாதி மாற்ற சடங்கைச் செய்துவிட முடியாது!
காரணம் பிராமணர்கள் வகுத்துள்ள சாதிமாற்ற விதிப்படி, " சாதியை மாற்றிக்கொள்ளும் சடங்கைச் செய்பவர் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த பசுவின் வயிற்றுகுள் புகுந்து, வெளியே வந்தால் தான் சாதியே மாறும்" என்பதால் ஒரு ஆள் உள்ளே சுலபமாக போய்வரும் அளவுக்கு இடைவெளி விட்டு பெரிதாக பசுவின் உருவத்தை தங்கத்தால் செய்யவேண்டும்! அப்படி செய்யப்பட்ட தங்கத்தால் ஆன அந்த பசுவின் உருவத்தை பிராமணர்களுக்கு தானமாக கொடுத்துவிட வேண்டும்!
இந்த தங்கப் பசு மட்டுமில்லை பிராமணர்களுக்கு அதாவது சாதி மாற்ற வேள்வியில் கலந்து கொள்ளும் அணைத்து பிராமணர்களுக்கும் உயிருடன் உள்ள பசுக்களையும், பரிமள வாசனாதிகள், வஸ்திரங்களையும், பிராமணர்கள் விரும்பும்,நிலம் உள்ளிட்ட இன்னபிறவற்றையும் தானமாக கொடுக்க வேண்டும்!
அதாவது பிராமணர்கள் அனைவருக்கும் ஒருவனின் சாதிமாற்றதால் நன்மைகள் கிடைத்து வந்தது! பயன் அடைந்தனர். பிராமணர்களால் சாதி மாற்றப் பட்டதால் அவனது அந்தஸ்து உயர்வடைந்து விட்டதல்லவா? அதனால் சாதி மாற்றப் பட்ட பிராமணர் அல்லாதவன் தொடர்ந்து பிராமணர்களின் நன்மை, மேன்மையை உத்தேசித்து நடந்து கொண்டு வர வேண்டியது கடமையாகவும்,அவசியமாகவும் ஆகிவிடும்! பிராமணர்கள் தொடர்ந்து அவரின் நலத்தை விரும்பி யாகங்கள் பூஜைகள் செய்தும் , அதற்கும் பிரதி பலன் அடைந்து கொண்டு, எப்போதும் சுகபோகங்களுடன் வாழ்ந்து வருவார்கள்!
கூடவே, இதர சாதிகளை, குறிப்பாக உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களை சுரண்டி வருவார்கள்! இதுதான் ஹிரணிய கர்ப்பம் என்ற சாதி மாற்றத்தில் பார்ப்பனர்கள் கையாண்டுவரும் சதிகள்!
நமது பக்கத்துக்கு மாநிலமும், இப்போது நம்மோடு பகைகொண்டு பழி வாங்கி வரும் மாநிலமும் ஆன... கேரளா மாநிலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் கடந்த நூற்றாண்டுவரை இதுபோல சாதி மாற்றம் செய்யும் நிகழ்ச்சி, அரசு உரிமைக்கு வருபவர்களுக்கு பார்ப்பன நம்பூதிரிகள் செய்து வந்தனர்!
வழிவழியாக ராஜபரம்பரையில் வந்தவரான, சோழ சாம்ராச்சியத்தை நிறுவிய, திருமுறைகண்ட சோழன், உலகளந்தான், அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜனுக்கும், அவனது மனைவி உலோகமாதேவிக்கும் பார்ப்பனர்கள் "சாதிமாற்ற சடங்கை " ராஜராஜனின் அந்திமக் காலத்தில் நடத்தினார்கள்!
அதனைப் பற்றி அடுத்து பார்ப்போம்!
எனது தளத்துக்கு வரும் உங்களுக்கு ஒரு விளக்கம்:
இந்த பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் நான் பழைய குப்பையை கிளறுவதாக, ஒருசாரரை வெறுப்பதாக,வெறுத்து எழுதுவதாக, நினைக்கத் தோன்றும்! உண்மையில் எனக்கு அதுபோல எண்ணம் நிச்சயம் இல்லை! வரலாறை சரி செய்யப் போவதாக சொல்லி இந்துத்துவ வாதிகள் பாபர் மசூதியை இடித்தபிறகு,இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு,அமைதி கேள்விக்குறியாகி உள்ளது.! இந்தியாவில் குண்டுவெடிப்பு, தீவிரவாதம்,மதவாதம் ஆகியவைகளின் வீச்சு மக்களிடமும், அரசியலிலும் அதிகரித்து உள்ளது!
பொதுவாக மதத்தை அரசியலில் கலப்பதை விரும்பாத நான், மதவாதிகளின் கையில் ஆட்சியை ஒப்படைக்கும் சூழல் ஏற்பட்டுவிட கூடாது என்ற எண்ணத்திலும், வரலாறை சரிசெய்கிறேன் பேர்வழி என்று பிறசமயதினர் மீது , மக்களைத் தூண்டும் முயற்சியை தடுக்கவும் வேண்டியே, இதனை பதிவு செய்து வருகிறேன்! நியாய உணர்வு உள்ளவர்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எதிபார்ப்புடன்,
- உங்கள்நண்பன் ஹோசூர் ராஜன்.
நன்றி ஒசூர் ராஜன்,,
Comments