பாண்டியன் நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம். காலம்: பொதுவாக சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும் இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி இளமையிலேயே பகைவரை பொருது வென்ற பாண்டிய மன்னன் தல...