அங்கோர் அதிசய அழிவுகள்
வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்துமதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்தில் கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிலிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவா...